Wed Apr 02 2025 23:19:16 GMT+0000 (Coordinated Universal Time)
பாபநாசம் கோயிலில் இசுலாமிய அறக்காவலரா? உண்மை என்ன?
பாபநாசம் கோயிலில் இசுலாமிய அறக்காவலர் என்று பரப்பப்படும் வதந்திக்கு, தான் இந்து தான் எனவும், தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் நர்க்கீஸ்கான் எனும் பெயரையே தனக்கு வைத்துவிட்டதாகவும் அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Claim :
பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்க்கீஸ்கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள்.Fact :
நர்க்கீஸ்கான் என் தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் பெயர் என அறக்காவலரே காணொளிப் பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மத வேற்றுமை இன்றி மக்கள் ஒன்றிணைந்து பயணித்து வருகின்றனர். அண்டை அயலாருக்கு உதவுவது முதல், மத சடங்குகளை மதிப்பது என நட்பு பாராட்டி வருகின்றனர். இந்த நேரத்தில், தஞ்சாவூரில் உள்ள பழமைவாய்ந்த பெருமாள் கோயிலில் இசுலாமிய அறக்காவலர் நியமிக்கப்பட்டுள்ளார் எனும் சமூக வலைத்தளப் பதிவு வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ்நாடு பா.ஜ.க-வின் ஒருங்கிணைப்புக் குழுவில் இருக்கும் எச்.ராஜா இது போன்ற ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், “பெருமாள் கோவில் அறங்காவலராக இஸ்லாமியரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை...
இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா? இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சி..!!
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா நெடுந்தெரு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்கீஸ் கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள்.
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் கடவுளாக ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர் எப்படி இந்து கோவில்களை பராமரிப்பார். அவர் எப்படி கோவில்களில் வழிபாடு நடத்துவார். இந்து சமய அறநிலையத்துறையில் வேற்று மதத்தவர்கள் இருக்கக் கூடாது என HRCE சட்டம் இருக்கும்பொழுது அதை மீறி சட்டத்திற்கு விரோதமாக ஒரு இஸ்லாமியரை எப்படி நியமிக்க முடியும்..?
இஸ்லாமிய அறங்காவலருக்கு இந்துக்களின் ஆகம விதிகள் எப்படி தெரியும்..? இதுபோல் மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா?
இது திட்டமிட்டு இந்து கோவில்களை அழிக்கும் முயற்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே உடனடியாக இஸ்லாமிய அறங்காவலரை நீக்கிவிட்டு, இஸ்லாமியரை அறங்காவலராக நியமித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் மீது பற்றுள்ள இந்து அறங்காவலரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
வைரல் பதிவின் இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாடு இந்து கோயில்களில் ஒரு இசுலாமியர் எப்படி அறக்காவலராக முடிவும் என்ற கேள்விகளோடு, எச்.ராஜாவின் பதிவின் உண்மைத் தன்மையைக் குறித்து ஆராயத் தொடங்கினோம். ‘நர்க்கீஸ்கான்’ என்ற பெயரோடு தேடுதல் தொடங்கியது.
அப்போது சம்பந்தப்பட்ட தஞ்சாவூர் பாபாநாசம் இராஜ கோபால சுவாமி திருக்கோயில் அறக்காவலரே ஒரு காணொளிப் பதிவை வெளியிட்டிருந்ததை நக்கீரன் செய்தித் தளத்தில் காணமுடிந்தது. அதில், “தஞ்சாவூர் பாபாநாசம் இராஜ கோபால சுவாமி திருக்கோயில் அறங்காவலராக 15 நாட்களுக்கு முன்பு என்னை நியமித்தார்கள். அறங்காவலர் குழுவில் நானும் ஒரு உறுப்பினராக இருக்கிறேன். தெய்வீக வழிப்பாட்டில் சிறப்பாக இயங்க வேண்டும் என்று நினைத்துதான் இதற்குள் வந்திருக்கிறோம். என்னுடைய பெயர் நர்க்கிஸ்கான்; நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் என்று வதந்தி பரப்பி வருகின்றனர். அது உண்மையில்லை. நான் இந்துதான்; அதற்கான ஆதாரங்களை அறங்காவலர் துறை அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறோம்.
நான் எனது தாய் வயிற்றில் இருக்கும் போது மிகவும் ஆபத்தான நிலையில் பிரசவம் பார்த்த என் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் ஒரு இஸ்லாமியர். அவர் பெயர்தான் நர்க்கீஸ்கான். உயிர்கொடுத்து என்னைக் காப்பாற்றினார் என்ற நன்றி விசுவாசத்திற்காக அவரது பெயரை எனக்கு வைத்தார்கள். மற்றபடி நான் இந்துதான். இதுகுறித்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள்” என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அரசுத் தரப்பில் ஏதேனும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய்கையில், நர்க்கீஸ்கானின் அரசு சான்றிதழ்களை வெளியிட்டு, அவரது அடையாளத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அரசுச் சான்றிதழில், அவரது பெயர் டி.நர்க்கீஸ்கான் எனவும் தந்தை பெயர் கே. தங்கராஜ் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், நர்க்கீஸ்கான் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இது உண்மையல்ல என தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு விளக்கமளித்துள்ளது.
முடிவு:
மேற்கொண்ட தணிக்கையில், தஞ்சையின் பாபநாசம் பெருமாள் கோயிலில் அறக்காவலராக நியமிக்கப்பட்டவர் நர்க்கீஸ்கான் இந்து தான் என்பது உறுதியானது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
Claim : பழமை வாய்ந்த ராஜகோபால பெருமாள் கோவிலின் அறங்காவலராக நர்க்கீஸ்கான் என்கிற இஸ்லாமியரை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நியமித்திருக்கிறார்கள்.
Claimed By : Social Media Users
Claim Reviewed By : TeluguPost FactCheck
Claim Source : X
Fact Check : False
Next Story