உண்மை சரிப்பார்ப்பு : தந்தையை காதலனிடம் கெஞ்ச வைத்த மகள் என பரவும் காணொளி -சித்தரிக்கப்பட்ட ஒன்று !
தன் தந்தையை இளம் பெண் ஒருவர் காதலனின் கால்களில் விழச் செய்த பரிதாபமான காணொளி காட்சி;

உண்மை சரிப்பார்ப்பு : இந்த காணொளியில் வரும் காட்சிகள் பொழுதுபோக்கிற்காக நடிகர்கள் சிலர் நடித்து படமாக்கப்பட்டது. அது உண்மையான சம்பவம் இல்லை.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்திலும் இன்றளவிலும் காதல் திருமணங்களை பெரிதும் பல குடும்பங்கள் பெரிதும் ஆதரிப்பது இல்லை. ஆணவ கொலைகள் போன்ற கொடுமைகளும் கடந்த காலத்தில் அரங்கேறியுள்ளன. தற்போது தான் திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதரின் உரிமை என்ற கருத்து, சட்டம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பரவி வருகின்றது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கை அமைத்து தருவதை தங்கள் முதன்மையான கடமையாக கருதும் சமுதாயமாகவே தமிழ் சமூகம் இதுவரையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. கல்வி, தொழில் மற்றும் பொருளாதாரத்தில் சிறந்து தங்களை பண்படுத்திக்கொண்ட குடும்பங்களால் மட்டுமே காதல் திருமணங்களை மனித இயல்பாக ஏற்றுக்கொண்டு எதார்த்தமாக நடந்துக்கொள்ள முடிகிறது.
இந்நிலையில் தனது காதலனிடம் பெண்ணை பெற்றவர்கள் கெஞ்சி , காலில் விழுந்து கதறுவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் வெகுவாக பகிரப்பட்டது. இந்த காணொளி முதலில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. பின்னர் வாட்ஸ்அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட பல தளங்களில் வேகமாக பரவியது.
இக்காணொளி பற்றி பதிவிட்ட பலரும் அப்பெண்ணை திட்டியும், அந்த தந்தைக்கு அனுதாபம் தெரிவித்தும் தைரியம் கூறியவாரும் பதிவிட்டு வருகின்றனர். சிலர், சமூக மதிப்பீட்டை கருத்தாக்கி, இளைஞர்கள் மாறிவிட்டனர், பெரியவர்கள் மீதான மரியாதை குறைந்துவிட்டது போன்ற விமர்சனங்களை முன்வைத்தனர்.
இத்தகவல் குறித்த சமூக ஊடகப்பதிவுகளின் விவரத்தினை இங்கே காணலாம்
உண்மை சரிப்பார்ப்பு :
மக்களிடம் ஒரு பதற்ற உணர்வை ஏற்படுத்தும் இக்காணொளியினை தெலுங்குபோஸ்ட் உண்மை சரிப்பார்ப்பு குழு ஆய்வு செய்தது. அக்காணொளியினை கூர்ந்து கவனித்தால், அதில் தோன்றும் நபர்களின் வெளிப்பாடு இயல்பாகத் தோன்றவில்லை. உண்மையான சம்பவத்தில் காணப்படும் உணர்வுப் பிரதிபலிப்புகள் போலில்லாமல், இது திட்டமிடப்பட்ட காட்சியை போன்றிருந்ததை உணர முடிந்தது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த காணொளியில் உள்ள இன்ஸ்டாகிராம் குடியீட்டினை வைத்து தேடி பார்த்தோம். அப்போது சாய் விஜய் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு கொண்டுச் சென்றது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்ச் 21ஆம் தேதி அந்த காணொளி பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அக்காணொளி குறித்த முழுவிவரம் குறித்து தேடி பார்த்தோம். அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தின் விவரத்தில் ஒரு யூ டியூப் பக்கத்தின் இணாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அது நம்மை
அதற்குள் சென்று பார்க்கும் போது ‘சாய் விஜய்’ என்ற யூடியூப் பக்கத்திற்கு அழைத்து சென்றது. அதில் இந்த வீடியோவின் முழுமையான பதிவு உள்ளாதா என்று தேடி பார்க்கையில், மார்ச் 19ஆம் நாள் அன்று 'காலில் விழுந்து கதறி அழுத அப்பா | மணம் இறங்காத பெண்' என்ற தலைப்பில் 13:30 நிமிடங்கள் கொண்ட காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில் பார்க்கையில், சரியாக 10:18வது நிமிடத்தில் பரவி வரும் காணொளியின் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
முழுமையான காணொளியின் விவரம் மற்றும் இணைப்பு இங்கே
மேலும் இது குறித்து தொடர்ந்து தேடினோம். அப்போது சமூக ஊடகங்களுக்காக, தந்தையை எதிர்த்து காதலுனடன் மகள் செல்வது போன்ற பல காணொளிகள் படம்பிடிக்கப்பட்டு, 7 பாகங்களாக பதிவேற்றம் செய்துள்ளார் சாய் விஜய் என்பது தெரிய வந்தது. அந்த காணொளிகளின் உரிமை துறப்பில், இந்த காணொளி பொழுதுபோக்கு நோக்கத்திற்காக மட்டுமே என்றும். இக்காணொளியில் தோன்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியுடன் மட்டுமே பதிவேற்றப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதே போல் பல காட்சிகள் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக படமாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே இது உண்மையான சம்பவம் என் கருதி யாரும் இதனை நம்ப வேண்டாம் என தெலுங்குபோஸ்ட் தெரிவிக்கின்றது.
முடிவு: இந்த தகவலாய்வு விசாரணையில் காணொளியில் வருவது உண்மையான சம்பவமல்ல என்பதும், அதில் வரும் காட்சிகள் முன்னதாக திட்டமிட்டு படமாக்கப்பட்டக் காணொளி என்பதும் உறுதியாகிறது. காட்சிப்பதிவுகளை பகிர்ந்த சில சமூக ஊடக பக்கங்கள் இதனை உண்மை சம்பவமாக கருதினாலும், உண்மையில் அது ஒரு இயல்பான நிகழ்வு அல்ல.
சமூக ஊடகங்களில் பரவும் ஒவ்வொரு தகவலையும் நம்புவதற்கு முன் அதன் நம்பகத்தன்மையை சரிபார்ப்பது அவசியம். உண்மை தெரியாமல், போலியான தகவல்களை பகிர்வது தவறான புரிதல்களையும் சமூகத்தில் தேவையற்ற எதிர்ப்புகளையும் உருவாக்கும். இதனை தவிர்க்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போலிச்செய்திகளை புரக்கணிக்க வேண்டும்.