உண்மை சரிபார்ப்பு: பொது இடத்தில் ஆ.ராசா பெண்ணை கட்டிப்பிடித்ததாக பரவும் புகைப்படம் – உண்மை என்ன?
பொதுவெளியில் பெண் ஒருவரை ஆ.ராசா கட்டியணைப்பதாக பரவும் புகைப்படம்

Claim :
பொதுவெளியில் பெண் ஒருவரை ஆ.ராசா கட்டியணைப்பதாக பரவும் புகைப்படம்Fact :
அந்த புகைப்படத்தில் இருப்பவர் ஆ.ராசா. அல்ல. இத்தகவல் போலியான ஒன்று
உண்மை சரிபார்ப்பு: பொதுவெளியில் பெண் ஒருவரை ஆ.ராசா கட்டியணைப்பதாக பரவும் புகைப்படம் மாற்றியமைக்கப் பட்ட ஒன்று. அப்படம் மகாராஷ்டிரா அரசியல் நிகழ்வில் எடுக்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படும் போதும், உண்மை பின்னணியை அறியாமல் பலரும் அதனை பகிரும் சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத் துறைகள் சார்ந்த பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய தகவல்கள் என்றால் மிக எளிதாக பரவும் தன்மை சமூக ஊடக பயனர்களிடம் காணப்படுகிறது. இதுபோல் ஒரு வைரல் பதிவுதான் இது. திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா ஒரு பெண்ணை பொதுவெளியில் கட்டியணைத்ததாக காட்சிப்படுத்தப்பட்ட புகைப்படம் வைரலாக பரவியுள்ளது.
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் இருப்பவர் ஆ.ராசா. தற்போது நீலகிரி மக்களவை உறுப்பினராக உள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
திராவிட இயக்கம் தொடர்பான ஆ.ராசாவின் பேச்சுகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதே சமயம் அவரது பேச்சுகள் சில சமயங்களில் சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளன. தற்போது மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக முழங்கக் கூடிய முக்கிய நபர்களில் ஒருவராக ஆ.ராசா உள்ளார்.
இந்த நிலையில் பொது வெளியில் பெண் ஒருவரை ஆ.ராசா கட்டியணைப்பது போல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, இந்த புகைப்படம் உண்மையானதா? அல்லது மாற்றப்பட்டதா? என்பதை தெலுங்கு போஸ்ட் குழு சார்பில் ஆய்வு செய்தோம்.
இது தொடர்பான செய்தியினை எக்ஸ் X (முன்னாள் ட்விட்டர்) தளம் மற்றும் பல சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனங்களுடன் ஆ.ராசா அவர்களின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
@AnithaDevar21 என்ற எக்ஸ் பயனர், “திராவிட கருமம் புடிச்சவங்க” என குறிப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டார்.
@ganesan_kirubaa என்ற மற்றொரு பயனர், “அந்தப் பக்கம் யாருடா உபிஸ்?” எனக்கூறி விமர்சித்திருந்தார்.
இதுபோன்ற பதிவுகள் தொடர்ந்து அதிகமாக பகிரப்பட்டதால், புகைப்படம் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றது. இதன் உண்மை நிலையை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் தெலுங்கு போஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு விசாரணை மேற்கொண்டது.
உண்மை சரிப்பார்ப்பு:
முதலில், புகைப்படத்தை ஒட்டுமொத்தமாக ஆய்வு செய்யும் போது சில விசயங்கள் சந்தேகத்திற்குரியவையாக இருந்தன:
பொதுவாக, ஆ.ராசாவின் உடை. அவர் பெரும்பாலும் சட்டை-வேட்டி அல்லது சட்டை-பேண்ட் அணிவதை வழக்கமாக கொண்டவர். ஆனால், வைரல் புகைப்படத்தில் அவர் வெள்ளை நிற ஜிப்பா (Jippa) அணிந்திருப்பது போல இருந்தது.
புகைப்படத்தில் இருக்கும் முகம் மற்றும் உடல் அமைப்பை நுணுக்கமாக கவனித்தால், தலைமுடி பகுதி வெட்டி ஒட்டியதுபோல் காணப்பட்டது.
முகத்தின் முன்பகுதி மற்றும் மூக்குப் பகுதியின் தோல்நிறத் தோற்றத்தில் வேறுபாட்டினை காண முடிந்தது.
மேலும் ஆ.ராசா அவர்களின் உடல் அமைப்பு மிக ஒல்லியாக இருப்பது, இயல்பான அவரின் தோற்றத்துக்கு மாறுபட்டதாக உள்ளது.
இதன் மூலம், புகைப்படம் மாற்றப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடிந்தது. இக்கருத்தினை உறுதிப்படுத்துவதற்காக முதலில் நாங்கள் கூகுள் லென்ஸ் (Google Lens) மூலம் Reverse Image Search செய்தோம்.
இந்த தகவல் ஆய்வு நடவடிக்கையின் போது, இந்த புகைப்படம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எடுத்தது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், புகைப்படத்தில் உள்ளவர்கள் ஆ.ராசா அல்ல என்பதும் உறுதியாக நிரூபிக்கப்பட்டது.
அசல் புகைப்படத்தில் உள்ளவர்கள் யாரென்றால் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்பிரியா சுலே மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே ஆவார்.
உண்மை புகைப்படம்
மேலும் கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு நடைப்பெற்றது. அதில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சி உறுப்பினர்கள் வெற்றி பெற்று, முதல் நாள் சட்டமன்ற கூட்டத்திற்கு வந்தபோது, NCP – SP கட்சியை சேர்ந்த எம்.பி., சுப்ரியா சூலே (சரத் பவார் மகள்) அவர்களை வரவேற்றார். அந்த நிகழ்வின்போது சிவசேனா (UBT) கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஆதித்யா தாக்கரேவை சுப்ரியா சூலே அவர்களை ஆரத்தழுவினார். அப்போது வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, உணர்ச்சிவசப்பட்டு சுப்ரியா சுலே, ஆதித்யா தாக்கரேவை கட்டியணைத்த புகைப்படமாக இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இச்செய்தியினை புகைப்படத்துடன் இந்தியா டுடே, நேஷனல் ஹெரால்டு மற்றும் அமர் உலாஜா போன்ற ஊடகங்கள் உண்மைச் செய்தியுடன் வெளியிட்டுள்ளன.
முடிவு: சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம் மாற்றியமைக்கப்பட்ட ஒன்றாகும். பொதுவெளியில் ஒரு பெண்ணை ஆ.ராசா கட்டியணைப்பது போல வைரலாகும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் ஆகும். அதில் இருப்பவர் ஆதித்யா தாக்கரே என்பதுதான் உண்மை. ஆனால், ஆ.ராசா கட்டிப் பிடித்ததாக தவறான தகவல் பரவுகிறது.
இந்த ஆதாரங்கள் மூலமாக வைரல் புகைப்படத்தில் இருப்பது ஆ.ராசா அல்ல என்பதும், சிவசேனா முன்னாள் அமைச்சரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே என்பதும் தெரியவருகிறது. ஆனால், சிலர் உள்நோக்கத்துடன் ஆதித்யா புகைப்படத்திற்கு பதிலாக ஆ.ராசா புகைப்படத்தை எடிட் செய்து, தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது தெளிவாகிறது.
இதுபோன்ற தவறான தகவல்களை உண்மைத்தன்மையை அறியாமல் பகிரக்கூடாது. சமூக வலைதளங்களில் பரவும் எந்த தகவலாக இருந்தாலும், அதன் உண்மை நிலையை சரிபார்த்து மட்டுமே பகிர்வது அவசியம். போலிச்செய்தி பரவலை தவிர்ப்போம்.