Sun Apr 06 2025 08:17:37 GMT+0000 (Coordinated Universal Time)
குறிப்பிட்ட சமூகத்தை குறித்து எச்.ராஜா பேசியதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தாரா? உண்மை என்ன?
நாடார் சமூகம் குறித்த எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்ததாகப் பரவும் செய்தி பொய் என நிரூபிக்கப்பட்டது.

Claim :
குறிப்பிட்ட சமூகத்தைக் குறித்து எச்.ராஜா பேசியதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார் என்று பரவும் செய்தி.Fact :
பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்ததாக வலம்வரும் செய்தி போலியானது என தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கட்சித் தலைவர்கள் பொது வெளியில் பேசுவதை, கிளிப்பிங் செய்து முன்பின் கூறப்பட்ட தகவல்களை மறைத்து, குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்புவது டிஜிட்டல் தலைமுறையில் பெருகிவருகிறது. இவற்றை கண்டறிவதும், சரியானதை மக்களிடத்தில் சொல்வதும் செய்தி நிறுவனங்களின் கடமையாகும். இந்த நேரத்தில் எச்.ராஜா குறிப்பிட்ட சமூகத்தைக் குறித்து சர்ச்சைக்குரியக் கருத்துகளைப் பேசியதாகவும், அதற்கு பாஜகவின் முன்னாள் மக்களவை உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
1tamilnews என்ற இணையதளத்தில், “நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல - எச்.ராஜாவுக்கு பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம்!” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்குக் கீழே, “பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நாடார் சமுதாய மக்கள் தமிழர்கள் அல்ல என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். "நாடார்கள் தமிழர்கள் அல்ல என்று எச். ராஜா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். என் மீதும் தமிழிசை சௌந்தர்ராஜன் மீதும் இருக்கும் கோபத்தை ஒரு சமூகத்தின் மீதே காட்டுவது தவறு" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சில பயனர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் இதே செய்தியுடன் இருக்கும் புதிய தலைமுறை செய்தியின் கார்டு ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். அப்படி பரவலாக பகிரப்படும் கார்டின் காப்புப்பிரதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
வைரல் பதிவின் இணைப்பை இங்கே காணலாம்.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் எச்.ராஜாவுக்கு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து இப்படியான கருத்துகளை பேசினாரா என்பதை அறிய, “நாடார்கள் தமிழர்கள் அல்ல” என்ற சொற்றொடருடன் இணையத்தில் தேடினோம். அப்போது எச்.ராஜா இது தொடர்பாகப் பேசியதாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது. ‘கால்டுவெல்லுக்கு சிலை எதற்கு’ என்ற தலைப்பில் ’தினமலர்’ அந்த செய்தியை வெளியிட்டிருந்தது. அக்டோபர் 8, 2018 அன்று இந்த செய்தி வெளியாகி இருந்தது.
அதில், “கால்டுவெல், நாடார் சமூகத்தை பற்றி குறிப்பிட்டதை சமீபத்தில், ஒரு மேடையில் பேசினேன். அது, என் கருத்து என்பது போல, சமூக ஊடகங்களில் பரப்பி, என்னை சர்ச்சைக்குள்ளாக்கினர். நான், எதை பேசினாலும், சர்ச்சைக்குரியதாய் மாற்ற, பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி, கால்டுவெல் புத்தகம் ஒன்றை குறிப்பிட்டு, இவர் அவ்வாறு பேசியது உண்மை தான் என்பது தெரிந்தது. எனினும், இந்த செய்தி 2018-ஆம் ஆண்டில் பதிவேற்றப்பட்டது என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். ஆனால், உலா வரும் செய்தி வெளியானது மார்ச் 25, 2025; அதாவது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டதாகும்.
இதனையடுத்து, இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் ஏதாவது பேசி இருக்கிறாரா என்பதை அறிய அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் நேரடியாக சென்று ஆய்வு செய்தோம். அதிலும், இதுபோன்ற எந்த கண்டன பதிவும் இடம்பெறவில்லை.
தொடர்ந்து ‘எச்.ராஜாவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார்’ என்று தேடுகையில், நியூஸ் மீட்டர் வெளியிட்டிருந்த ஒரு செய்தியைப் பார்க்க முடிந்தது. அதில், புதிய தலைமுறை செய்தியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் இதே கருத்துடைய ஒரு கார்டு பரப்பட்டு வருவதாகவும், அதில் எந்த உண்மைத் தன்மையும் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த செய்தி போலியானது என புதிய தலைமுறை விளக்கம் அளித்த கார்டு ஒன்றையும் நியூஸ் மீட்டர் உண்மை கண்டறியும் குழு பதிவிட்டிருந்தது. அதில் பரவிவரும் பொன் ராதாகிருஷ்ணன் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தார் என்றுள்ள புதிய தலைமுறை செய்தியின் கார்டை குறிப்பிட்டு, இந்த செய்தி புதிய தலைமுறை வெளியிடவில்லை எனவும் உண்மை செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், செய்திகளை சரிபார்க்கவும் புதிய தலைமுறை இணையதளத்தில் உள்ள லைவ் அப்டேட்டைப் பார்க்கவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
மேற்கொண்ட தணிக்கையின் முடிவில், எச்.ராஜா பேசியது பழைய செய்தி எனவும், அவர் கால்டுவெல் புத்தகத்தில் இருப்பதை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் எனவும், இதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
Claim : குறிப்பிட்ட சமூகத்தைக் குறித்து எச்.ராஜா பேசியதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார் என்று பரவும் செய்தி.
Claimed By : Websites, Social Media
Claim Reviewed By : TeluguPost FactCheck
Claim Source : Website
Fact Check : False
Next Story