உண்மை சரிபார்ப்பு: குழந்தைகளை சாக்கு மூட்டையில் கடத்துவதாக பரவும் போலி காணொளி
தமிழகத்தில் சிறுவன் சாக்கு மூட்டையில் கடத்தப்படும் அதிர்ச்சி காணொளி

Claim :
தமிழகத்தில் சிறுவன் சாக்கு மூட்டையில் கடத்தப்படும் அதிர்ச்சி காணொளிFact :
உண்மையில் அது தமிழ்நாட்டிற்கு தொடர்புடையது அல்ல. ஒடிசாவில் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் சாக்கிலிருந்து எடுக்கும் காணொளி.
தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் சாக்கு மூட்டையில் சிறுவனை கடத்தப்படும் காட்சிகள் என்று ஒரு காணொளி பதிவு முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களை அச்சுறுத்தும் செய்திப்பதிவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.
தமிழகத்தில் சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தல் என்று பரவும் அதிர்ச்சி காணொளி.. இது உண்மை தானா?
முகநூல் பக்கம் சிலவற்றில் சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தப்படும் காட்சி என்று ஒரு காணொளி பதிவிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக நாங்கள் ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
முகநூலில் பதிவின் விவரம் :
ஒரு வீட்டின் பகுதியில் கட்டப்பட்டுக் கிடக்கும் சாக்கு மூட்டையைத் திறந்துப் பார்க்க, அதிலிருந்து சிறுவன் ஒருவன் மயக்க நிலையில் எந்த உணர்வும் இல்லாமல் கீழே விழுகிறான். இந்த காணொளியினை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அதற்கு தலைப்பாக “குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வோம்” என்று மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பகிரப்பட்டுள்ளது.
மேலும் அந்த முகநூல் பதிவில் ‘புள்ள புடிக்கிறவன் சாக்கு முட்டையில போட்டு கொண்டு போயிடுவான் கேள்விப்பட்டிருப்போம் ஆனா அதை இப்ப நம்ம நேர்ல பார்க்கிறோம் எந்த ஊர் என்று தெரியவில்லை…!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மை கண்டறிதல்:
தமிழகத்தில் ஒரு ஊரில் சிறுவனை சாக்கு மூட்டையில் கடத்தியதாக அதிர்ச்சியூட்டும் தகவல் என்று பலரும் இந்த காணொளியினை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். அக்காணொளியில் பலரும் பேசுவதையும் அழுவதையும் கேட்க முடிகிறது. ஆனால் அந்த மொழி தமிழ் போலத் தோன்றவில்லை. எனவே, இந்த சமூக ஊடக பதிவு தொடர்பாக இணையத்தில் தகவலாய்வு செய்தோம்.
அந்த பதிவில் வரும் காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி Reverse Image Search மூலம் தேடினோம். அப்போது கடந்த டிசம்பர் 2025ல் இந்த பதிவினை ஒடிசா ஊடகங்கள் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஒரியா மொழியில் வெளியான பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். அதில், “கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள சம்புவா காவல் எல்லைக்குட்பட்ட கோபிநாத்பூர் கிராமத்தில் சாக்கு மூட்டையில் சிறுவன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது” என்று இருந்தது. அதில் அங்கு பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்த கொலைச் சம்பவம் பற்றியை செய்தித் தொகுப்பினை காண முடிந்தது.
இச்சம்பவம் தொடர்பாக Times of India வெளியிட்ட செய்திப்பதிவு:
இந்த தகவல் அடிப்படையில் கூகுளில் முக்கியச் சொற்களைக் கொண்டு தேடினோம். அப்போது ஆங்கிலத்தில் வெளியான பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. டிசம்பர் 23, 2024 அன்று 9 வயது சிறுவன் ஒருவன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அச்சிறுவன் திடீரென்று அவன் காணாமல் போகவே, குடும்பத்தினர், உறவினர்கள் அக்கம் பக்கங்களில் தேடினர். செவ்வாய்க் கிழமை காலை சிறுவனின் உடல் ஒரு வீட்டின் முன்பு சாக்குப் பையில் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் பழிவாங்கும் நோக்கில் நடந்தது என்றும், இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சார்ந்த கங்காராம் முண்டா என்பவரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்ததாகவும் செய்திகள் நமக்குக் கிடைத்தன.
இச்சம்பவம் குறித்த முழு செய்தி காணொளி பதிவு:
ஒடிசாவில் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அப்பதிவினை சிறுவன் கடத்தப்படும் காணொளி என்று தவறாகப் பகிர்ந்திருப்பது இந்த தகவல் ஆய்வில் தெளிவுப்பெருகிறது. குற்றம் செய்தவரின் முன் விரோதம், பகை காரணமாக சிறுவன் கொலை செய்யப்பட்டதாக காவல் துறையினரால் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது. ஆனால் அக்காட்சி தவறாக குழந்தை கடத்தல் என்று பீதியைத் தமிழ்நாட்டில் வதந்தியைப் பரப்பியுள்ளனர்.
ஆய்வின் முடிவு:
ஒடிசாவில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, சிறுவர்களை சாக்குப் பையில் போட்டு கடத்தும் கடத்தல்காரர்கள் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் TeluguPost தமிழ் தகலாய்வு செய்து அறிந்துள்ளது. எனவே, இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படங்கள், காணொளி போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.