Fri Mar 28 2025 05:11:59 GMT+0000 (Coordinated Universal Time)
உண்மை சரிபார்ப்பு: ஸ்ரேயா கோஷல் முதலீடு தொடர்பான தகவல்களை வெளியிட்டதால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் எனப் பரவும் மோசடி செய்தி!
பின்னணி பாடகர் ஸ்ரேயா கோஷல் தனது முதலீடு லாபங்களை கூறியதால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் எனப் பரவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வடிவத்தில் வரும் செய்தி போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

Claim :
தனது முதலீடுகள் தொடர்பான தகவல்களை ஸ்ரேயா கோஷல் வெளியிட்டதால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என பரவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.Fact :
தணிக்கையில் முதலீடுகள் தொடர்பாக இணைய மோசடி குழுக்கள் இதுபோன்ற செய்தி நிறுவனங்களின் வடிவங்களை போலியாகப் பயன்படுத்தி இணையவாசிகளை ஏமாற்றும் பணியில் ஈடுபட்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டது.
திரைப்பட பிரபலங்களை வைத்து விளம்பரப் படங்களை எடுப்பது காலங்காலமாக நடந்துவரும் ஒரு நிகழ்வு தான். அவர்களது ரசிகர்கள் தங்கள் தயாரிப்புகளை பயன்படுத்துவர் என்ற நம்பிக்கை நிறுவனங்களுக்கு இருந்தது. ஆனால், தற்போது திரைப்பிரலங்களின் அனுமதி இல்லாமலேயே அவர்கள் படங்கள் டிஜிட்டல் வலைத்தளங்களில் விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதுவும், முதலீடு சார்ந்த மோசடி நிறுவனங்கள் இவர்கள் படத்தை பயன்படுத்துகின்றனர்.
சமீபத்தில் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் அவரது முதலீடு சார்ந்த தகவல்களை டிவி நிகழ்ச்சியில் சொன்னதால் கைது செய்யப்பட்டார் எனும் செய்தி வெளியானது. இதனுடன் அவரது ரசிகர்கள் அவரை விடுதலை செய்யும்படி போராட்டம் நடத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
எக்ஸ் தளத்தில் பாதி விலை கடை (@halfpricesshop) என்ற சரிபார்க்கப்பட்ட குறியீடு கொண்ட கணக்கில் தான் ஸ்ரேயா கோஷல் சார்ந்த செய்தி பகிரப்பட்டிருந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது போல பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட் இருந்தது. அதில் ஸ்ரேயா கோஷல் படமுடன், ரசிகர்கள் அவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பதாகைகளை ஏந்தி இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் எக்ஸ் பதிவில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் ஸ்ரேயா கோஷல் தொடர்பான செய்தி ஒரு இணைப்பைக் கொண்டிருந்தது. ‘rugbyhurtfell.top’ என்று அந்த இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை ஆராய உள்ளே சென்று பார்த்தோம். அப்போது, ‘https://in.rugbyhurtfell.top/click?key=57ca2184841bec634a1e&account=7&buyer=AGAV&domain=IN.rugbyhurtfell.top’ இதுபோன்ற இணையதள முகவரி கொண்ட ஒரு பக்கம் தோன்றியது. அந்த பக்கம் பாதுகாப்பற்றது என புகார் எழுந்துள்ளதாக மைக்ரோசாப்ட் டிஃபெண்டர் (Microsoft Defender) எச்சரிக்கை விடுத்தது. அந்த வகையில் நாம் ஸ்ரேயா கோஷல் செய்தி வாயிலாகத் திறந்த பக்கம் பிரச்சினைக்குரியது என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
எனினும், உள்ளே என்ன தகவல் இருக்கும் என்பதை ஆராய, ‘Continue to the unsafe site’ அதாவது பாதுகாப்பற்ற இந்த தளத்தில் நுழைய வேண்டும் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து முன்னேறி சொன்றோம். அதில், இணையதள முகவரியின் அருகில் ‘அபாயகரமானது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இணைய பாதுகாப்பிற்காக பிரவுசர்களை வழங்கும் நிறுவனங்கள் இதுபோன்ற போலி தளங்களை கண்டறிந்து பயனர் தரவுகளை பாதுகாக்க இந்த எச்சரிக்கைகளை வழங்குகின்றன.
மேலும், திரையில் தோன்றிய தளம் அச்சுஅசலாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்றே இருந்தது. அதில் குறிப்பிட்ட செய்தி நிறுவனம் எப்படி செய்திகளை பதிவிடுமோ, அப்படியே இந்த போலி தகவலும் உருவாக்கப்பட்டிருந்தது. மிக முக்கியமாக ‘Lovarionix Liquidity' என்ற தளத்தின் வாயிலாக நான் வெறும் ரூ.21,000 பணத்தை முதலீடு செய்து பெரும் லாபத்தை அடைந்தேன் எனக் குறிப்பிடப்படிருந்தது. இதிலிருந்து, இது ஒரு மோசடி செய்தி எனவும், பயனர்களிடம் இருந்து பணத்தை கவர இவர்கள் இதுபோன்ற விளம்பர நாடகங்கள் நடத்துவது உறுதியானது.
மேற்கொண்டு, குறிப்பிட்ட அந்த தளத்தை அணுக உள்நுழைந்து பார்த்தபோது, ‘Lovarionix Liquidity’ பெயரிடப்பட்ட தளத்தில் படிவம் ஒன்று காட்டப்பட்டது. அதற்கு மேலாக தினசரி 90,000 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம் என தலைப்பிடப்பட்டிருந்தது. கிடைத்தத் தகவல்களின்படி, இணையவாசிகளின் பணம், தரவுகள் போன்றவற்றிற்கு வலைவிரிக்கும் ஒரு மோசடி தளம் இது என்பது உறுதியானது.
இதுபோன்ற மோசடி செய்திகள் வேறு வெளியாகி உள்ளனவா என்பதை ஆராய, இணைய உலாவியில் தேடினோம். அப்போது உண்மை கண்டறியும் நியூஸ்மீட்டர் தளம் (NewsMeter) இந்த மோசடி தளம் தொடர்பான செய்தியை வெளியிட்டிருக்கிறது.
அதில், ஸ்ரேயா கோஷல் மட்டுமின்றி, அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், நேஹா கக்கர், ஜக்கி வாசுதேவ் ஆகியோரை குறித்து எழுதப்பட்ட பல கட்டுரைகளையும் பார்க்க முடிந்ததாக நியூஸ் மீட்டர் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிபிசி, வந்தே பாரத் லைவ் டிவி போன்ற வலைத்தளங்களின் செய்தி வடிவத்தையும் இந்த ஆன்லைன் பங்குச்சந்தை வர்த்தக நிறுவனம் மோசடிக்காகப் பயன்படுத்தியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அவற்றையும் கிளிக் செய்தபோது, வேறு இணையதளங்கள் காட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
கூடுதலாக, டிசம்பர் 7, 2023 அன்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதாவது தங்களைப் போலவே போலியான பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை உங்களிடம் பண மோசடி, முதலீடு மோசடி போன்றவற்றில் ஈடுபடலாம். எனவே, இணைய முகவரி https://indianexpress.com/ அல்லாத எந்த இணைப்பையும் அணுகவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
முடிவு:
மேற்கொண்ட தணிக்கையின் வாயிலாக பிரபலங்களின் பெயர்களில் வரும் இதுபோன்ற கட்டுரைகள், அதில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரிகள் மோசடி குழுக்களால் உருவாக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டது. இணையவாசிகள் எப்போதும் தாங்கள் கிளிக் செய்யும் இணையதள முகவரியை சரிபார்க்கும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.
Claim : தனது முதலீடுகள் தொடர்பான தகவல்களை ஸ்ரேயா கோஷல் வெளியிட்டதால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் என பரவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
Claimed By : Social Media Posts
Claim Reviewed By : TeluguPost
Claim Source : Social Media
Fact Check : False
Next Story