Tue Apr 22 2025 22:28:27 GMT+0000 (Coordinated Universal Time)
உண்மை சரிபார்ப்பு: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டி வழக்கு தொடுத்தது இசுலாமிய அமைப்பா?
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகியவர்கள் இந்துக்கள் தான், அது இஸ்லாமிய அமைப்பு அல்ல என கண்டுபிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களின் கூற்றுகள் பொய் என்று நிரூபிக்கப்பட்டது.

Claim :
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இசுலாமிய அமைப்பு வழக்குத் தொடுத்தது.Fact :
வழக்கைத் தொடுத்தது இந்து பெண்களும், இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்பது இணையத்தில் மேற்கொண்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்ப பக்தர்களை அதிரவைக்கும் வகையில் செப்டம்பர் 28, 2018 அன்று நாட்டின் தலைமை நீதிமன்றம் ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. அதில், அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை ஐயப்பனை சன்னிதானத்தின் சென்று வழிபடலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் பெண்களுக்காக சபரிமலை வாயில்கள் திறக்கப்பட்டது. ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தது. ஒரு தரப்பு பெண்கள் கோயிலுக்கு செல்ல ஆயத்தமானது, மறுபுறம் பெண்களே இதற்கு எதிராக அணி திரண்டதும் என கேரள மாநிலம் பெரும் சலசலப்புடன் காணப்பட்டது.
இந்த சூழலில், அக்டோபர் 2018-இல் பெண்கள் பாதுகாப்புடன் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது. பலரும் தடுத்து நிறுத்தப்பட்ட வேளையில், பத்திரிகையாளர் கவிதா ஜக்டால், ரெஹானா ஃபாதிமா ஆகியோர் இணைந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்றனர். மலையேறிய அவர்கள் சன்னிதானத்தின் அருகே வரும் முன்னரே போராட்டகாரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த போராட்டத்தில் பெரும்பாலான பெண்களும் கலந்துகொண்டனர் என்று குறிப்பிட்டுள்ளது பிபிசி ஆங்கிலத் தளம். சபரிமலையில் முற்றுகையிட்ட பெண்கள், மாதவிடாய் காலங்களில் ஏன் பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்ற கேள்வியை எழுப்பினர்.
தற்போது தான் பிரச்னைகள் சற்று தணிந்திருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் சிலர் புயல் போன்ற செய்தி ஒன்றைப் பரப்பி வருகின்றனர். மாலினி ஸ்ரீனிவாஸ் (X / @malinisrinivas8) எனும் எக்ஸ் பயனர், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக்கோரி இசுலாமிய அமைப்பு வழக்குத் தொடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
அவர் பதிவில், “மசூதியில் பெண்களை அனுமதிக்க வேண்டி, போன வருஷம், இந்து மக்கள் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கை தொடுத்தவர்கள் யாரும் முஸ்லிம்கள் இல்லை என்பதாலும், மாற்று மதத்தினர் இந்த உரிமையை கேட்க இயலாது என்று குறிப்பிட்டு இந்த வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்தது.
ஆனால், சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி வழக்கு போட்டது ஒரு முஸ்லிம் அமைப்பு. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தடை செய்யச் சொல்லி வழக்கு தொடுத்தது ஒரு கிறிஸ்துவ அமைப்பு. பொங்கல் விழாவின் முக்கிய நிகழ்வான ஜல்லிகட்டை தடை செய்ய வழக்கு தொடுத்தது ஒரு தொலைகாட்சி,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், சுமார் 6 லட்சம் பேர் இருக்கும் ஆன்மீகச் சிந்தனைகள் என்ற முகநூல் குழுவில் அர்ஜுனன் ஜி (Arjunan G) என்பவரும் பிப்ரவரி 5, 2025 அன்று மசூதியில் பெண்களை அனுமதிக்க வேண்டி என்று தொடங்கும் பதிவில் கேரள ஐயப்ப கோயில் விவகாரம் குறித்து அதே தகவல்களை பதிவிட்டு, கூடவே, “தமிழகத்தில் எதையும் கண்டு கொள்ளாமல் சேனல்களின் குடும்ப சீரியல்களிலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் மட்டுமே தனது மூளையை செலவு செய்கிறது உண்மையான அமைதி மார்க்கமான இந்து மதம்!?” என்று குறிப்பிட்டுள்ளார்.
வைரல் பதிவின் இணைப்பு இங்கே உள்ளது.
வைரலாக பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
Telugupost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி பொய்யாகப் பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த செய்தி தொடர்பான ஆய்வுகளை தொடங்கினோம். முதலில், ‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று யார் வழக்கு தொடுத்தது’ என்பதை ஆங்கிலத்தில் கூகுள் தேடலில் கேட்டோம். அப்போது, 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தித் தளத்தில் ஜூலை 9, 2019 அன்று ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “பக்தி பாஸ்ரிஜா, பிரேர்ணா குமாரி, லட்சுமி சாஸ்திரி, சுதா பால் மற்றும் அல்கா ஷர்மா ஆகிய 5 பெண் வழக்கறிஞர்கள் குழு அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி 2006ல் மனு தாக்கல் செய்தது,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதாவது, இந்த செய்தி வெளியிட்ட அன்றையக் காலகட்டத்திலேயே இதே போன்ற போலி செய்திகள் உலா வந்துள்ளன. அதுவும் இந்தி போன்ற கேரள மாநிலத்தில் அல்லாத மாற்று மொழிகளில். அதற்கு பதிலளிக்கவே டைம்ஸ் ஆஃப் இந்தியா 2019-இல் இந்த தகவல்கள் அடங்கிய செய்தியை வெளியிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
மேலும், இதுபோன்று வேறு ஏதேனும் சட்டம் சார்ந்த தகவல் தளத்தில் விவரங்கள் இருக்கிறதா என்பதைத் தேடி பார்த்தபோது, சுப்ரீம் கோர்ட் அப்செர்வர் (Supreme Court Observer) எனும் தளத்தில் சபரிமலை வழக்கு விவரம் தொடர்பான அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருந்தது.
அதில் மேல்குறிப்பிடப்பட்ட வழக்கு தொடர்ந்தவர்கள் பெயர்களுடன், அவர்களின் வழக்கறிஞர்களாக குப்தா என்ற பெயரை பார்க்க முடிந்தது. மேலும், இந்த வழக்கிற்கு நீதிமன்ற தோழமைகளாக ராஜு ராமச்சந்திரன், ராமமூர்த்தி ஆகியோர் இருந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது.
முடிவு:
நாம் மேற்கொண்ட தணிக்கையில் சபரிமலைக் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் செல்ல வேண்டி நீதிமன்றத்தை நாடியது இந்துக்கள் என்பதும், வழக்கில் வாதாடியது இந்து வழக்கறிஞர் என்பதும் தெரியவரிகிறது. எனவே, சமூக வலைத்தளங்களில் பரப்படும், ‘சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இசுலாமிய அமைப்பு வழக்குத் தொடுத்தது,’ என்ற கூற்று பொய்யானது என நிரூபிக்கப்பட்டது. இதன் வாயிலாக செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.
Claim : சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று இசுலாமிய அமைப்பு வழக்குத் தொடுத்தது.
Claimed By : Social Media Users
Claim Reviewed By : TeluguPost FactCheck
Claim Source : Social Media
Fact Check : False
Next Story