உண்மைச் சரிபார்ப்பு: 75 வயது அல்லது அதற்குமேலுள்ள மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு தொடர்பான பதிவுகள் தவறானது
முதியோர்களுக்கு மத்திய அரசு வருமான வரி விலக்கு அளித்துள்ளதாக கூறுவது தவறானது.
Claim :
75 வயது அல்லது அதற்குமேலுள்ள மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுFact :
மத்திய அரசு 75 வயது அல்லது அதற்குமேலுள்ள மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு எதுவும் வழங்கவில்லை.
முதியோர்களுக்கு மத்திய அரசு வருமான வரி விலக்கு அளித்துள்ளதாக கூறுவது தவறானது. மூத்த குடிமக்களுக்கு வருமான வரி செலுத்துவதில் எந்த தளர்வுகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இருப்பினும், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 194P இன் கீழ், 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வேகமாக பரவி வருகிறது. அதில்மூத்த குடிமக்கள் அவர்கள் ஈட்டும் வருமானத்திற்கு வரி செலுத்தத் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
ஆராய்ந்து பார்த்ததில் இந்தக் கூற்று பொய்யானது. 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 194P இன் கீழ் வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, வருமான வரி செலுத்துவதிலிருந்து அல்ல. எனவே, மத்திய அரசின் ‘புதிய’ அறிவிப்புக்குப் பிறகு மூத்த குடிமக்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற கூற்று தவறானது.
சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி
சமூக ஊடகப் பயனர் ‘திடீர்னு தூங்கிடுவேன்’ என்ற பக்கத்தில் நவம்பர் 29, 2024 அன்று ஒரு பதிவை பகிர்ந்துள்ளார், “இது உண்மையா, யாராவது தெளிவுபடுத்துங்கள், மத்திய அரசின் பெரிய அறிவிப்பு – மோடி அரசாங்கம் நம் நாட்டிள் உள்ள மூத்த குடிமக்கள் யாரும் வரி செலுத்த வேண்டியதில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கள் வருமானத்திற்கு வரி செலுத்த தேவையில்லை. அதே போல ஓய்வூதியம் மற்றும் பிற திட்டங்களின் வருமானத்தில் வாழம் மூத்த குடிமக்கள், இனி தங்கள் வருமானத்திற்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை, அவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை, மூத்த குடிமக்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த தகவலின்படி, மூத்த குடிமக்களுக்கு வரி விலக்கு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு மாற்றியுள்ளது, இதில் விதி 31, விதி 31A, படிவம் 16 மற்றும் 24Q மற்றும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இடையே முக்கிய மாற்றங்கள் அடங்கும். வரி விலக்கு பெற 12-BBA விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பித்து வருமான வரி விளக்கை பெற்றுக்கொள்ளலாம். சுரேஷ் போட், செயலாளர் - மகாராஷ்டிரா மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு - மும்பை - நவி மும்பை பிரிவு. மூத்த குடிமக்களுக்கு இந்த செய்தி மிகமுக்கியமானது, நீங்கள் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து அவர்களை பயன் அடைய செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக பரவுகிறது.
உண்மை சரிபார்த்தல் ( Fact check method)
இந்த வதந்தி செய்தியை விசாரிக்க, முக்கிய வார்த்தைகளை வைத்து செய்தியை தேடினோம், மூத்த குடிமக்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் செய்திகளோ, அரசு அறிக்கைகளோ எதுவும் கிடைக்கவில்லை. மாறாக, இந்தக் தகவல் பொய்யானது என பல செய்திகளை அறிக்கைகளை தான் பார்க்க நேரிட்டது.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் முக்கிய தகவல் நிறுவனமான Press Information Bureau (PIB)
, இந்த தகவலை மறுத்துள்ளது, “ஓய்வூதியம் மற்றும் வங்கியின் வட்டி மூலம் மட்டுமே வருமானம் உள்ள 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் (194பி பிரிவின் கீழ்). எங்கெல்லாம் அவர்கள் வரி செலுத்த வேண்டியுள்ளதோ, அங்கெல்லாம் வங்கிகள் அதை செலுத்தும் இடத்திலேயே பிடித்தம் செய்துவிடுகின்றன.”
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 194P இன் கீழ் 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அதிகாரப்பூர்வ வருமான வரி இணையதளம் தெளிவுபடுத்துகிறது.
வருமான வரி சட்டம் மூத்த குடிமக்களுக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் விலக்கு அளிக்கிறது:
A. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்
B. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பழைய மற்றும் புதிய வரி விதிகளின் கீழ் ₹3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, பழைய வரி விதிப்பு ₹5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கிறது, அதே நேரத்தில் புதிய வரி விதிப்பு ₹3 லட்சம் வரை விலக்கு அளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ வருமான வரி போர்ட்டலைப் பார்க்கவும்.
மூத்த குடிமக்களின் வருமானத்துக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று பதிவில் கூறப்பட்டு இருக்கிற தகவல் தவறானது என்பது உண்மை சரிபார்த்தல் நடவடிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இந்த தவறான பதிவை பதிவு செய்திருந்த பேஸ்புக் குழுவில் சுமார் 1.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
முடிவுரை (conclusion) : முதியோர்களுக்கு மத்திய அரசு வருமான வரி விலக்கு அளித்துள்ளதாக கூறுவது தவறானது. மூத்த குடிமக்களுக்கு வருமான வரி செலுத்துவதில் தளர்வுகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இருப்பினும், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 194P இன் கீழ், 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.