உண்மை சரிபார்ப்பு: ஒரு வெகுவாக பகிரப்பட்ட பதிவில் திமுக சட்டப்பிரிவு மாநாட்டில் டாக்டர்.அம்பேத்கரின் புகைப்படம் காணாமல் போனதாக தவறாக கூறப்படுகிறது
X சமூக வலைதளத்தில் வெளியான ஒரு பதிவு, திமுக சட்டப்பிரிவு மாநாட்டில் அம்பேத்கரின் புகைப்படம் மாநாட்டில் ஒதுக்கப்பட்டது என தவறான தகவல் பரப்புகிறது.

Claim :
திமுக சட்டப்பிரிவு மாநாட்டில் அம்பேத்கரின் புகைப்படம் காணவில்லை என்பது பதிவின் தரப்புFact :
திமுக சட்டப்பிரிவு மாநாட்டில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரையில் பி.ஆர். அம்பேத்கர் உட்பட பல தலைவர்களின் புகைப்படங்கள் தொகுப்பாக திரையிடப்பட்டன
சில தினங்களுக்கு முன்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மாநிலம் முழுவதும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை குறித்து அவமதிப்பாக கருத்து தெரிவித்ததாகக் குற்றம்சாட்டிய திமுக, பிரதமர் நரேந்திர மோடியிடம் அமித்ஷாவை ஆறு மாதங்களுக்கு அமைச்சரவை பொறுப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக் கொண்டது.
சமீபத்தில், திமுக சட்டப்பிரிவு தனது மூன்றாவது மாநில மாநாட்டை சென்னையில் நடத்தியது. இந்த மாநாட்டின் போது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’, திராவிடக் கல்வி, இடஒதுக்கீடு, பாஜக செயல்படுத்திய ‘அரசியல் சட்ட மீறல்கள்’ மற்றும் வரிவிநியோகம் உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு விவாதங்கள் நடந்தன.
இந்த மாநாடு நிறைவடைந்தவுடன், திமுக தனது விளம்பர பதாகையில் பி.ஆர். அம்பேத்கரின் புகைப்படத்தை இடம்பெற செய்யவில்லை எனக் குற்றம் சுமத்தும் ஒரு பதிவு சமூக ஊடகமான X-தளத்தில் வெளியானது. அதில், திமுக அம்பேத்கருக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்றும், அவரை புறக்கணிப்பதாகவும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பதிவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
“நடப்பது சட்டத்துறை மாநாடு ஆனால் அந்த சட்டத்தை தந்த அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் இல்லை
ஏன் இந்த புறக்கணிப்பு?தலீத் என்பதாலா?
தோழர் இதற்க்கு என்ன சொல்ல போகிறார்?
அம்பேத்கரை பற்றி பேசும் திமுக ஏன் அவருக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை?”
வெகுவாக பகிரப்பட்ட பதிவின் இணைப்பு இங்கே மற்றும் தரவின் இணைப்பு
சமூக ஊடக பதிவின் திரைபதிவுப் படம்
உண்மை சரிபார்ப்பு:
தெலுங்கு போஸ்ட் தகவலாய்வு குழு ஆராய்ந்தப்போது, திமுக சட்டப்பிரிவு மாநாட்டில் அம்பேத்கரின் உருவப்படம் இல்லை என்ற தகவல் தவறானது என தெளிவாகிறது.
மேலும் இது ஆளும் கட்சி நடத்திய முக்கியமான நிகழ்வாக இருந்ததால், எங்களது குழு You Tube-ல் தேடல் மேற்கொண்டது. பல்வேறு செய்தி ஊடகங்கள் இந்த நிகழ்வை பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளதை காண முடிந்தது. அதில் குறிப்பாக Sun News வெளியிட்ட "A Rasa (Raja) Fiery Speech" என்ற தலைப்பில் வெளியான காணொளியில், 2015 ஜனவரி 18 அன்று நடைபெற்ற திமுக சட்டப்பிரிவு மாநாட்டில் மூத்த கட்சி தலைவரான ஆ. ராசா பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது. அந்த நிகழ்வின் பின்னணியில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரையில் உள்ள தகவல்படம் தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக 1.01 நொடியில், பி.ஆர். அம்பேத்கரின் புகைப்படம் திரையில் தோன்றும் காட்சியை காணலாம்.
மேலும் தேடலை தொடர்ந்தபோது, IBC சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட காட்சிப் பதிவினை கண்டறிந்தோம். 1:44:01 நேர அளவில், டாக்டர் அம்பேத்கரின் புகைப்படம் டிஜிட்டல் திரையில் வருகிறது.
சில சமூக வலைதள பயனர்கள், அம்பேத்கரின் புகைப்படம் திரையில் தெரியாத தருணங்களை புகைப்படமாகப் பதிவு செய்து, ஆளும் திமுக கட்சி அவரை புறக்கணித்ததாக தவறாக தகவல் பரப்பியுள்ளனர்.
மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மற்றும் காணொளி ஆதாரங்களின் அடிப்படையில், திமுக சட்டப்பிரிவு மாநாட்டில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த குற்றச்சாட்டு தவறானது.