உண்மை சரிபார்ப்பு: ஜெயலலிதா சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அண்ணாமலை கூறினாரா?

ஜெயலலிதா சொத்துக்களை தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி என பரவும் நியூஸ் 7 தமிழ் செய்தி கார்டு போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.;

Update: 2025-02-16 18:29 GMT
உண்மை சரிபார்ப்பு: ஜெயலலிதா சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அண்ணாமலை கூறினாரா?
  • whatsapp icon

ஜெயலலிதா நகை விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. 1991 முதல் 1996 காலகட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தி 27 கிலோ தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11,344 புடவைகள், 750 ஷூக்கள், 91 வாட்சுகள், சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்தனர். இந்த 66 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டன. பின்னர், கர்நாடக சிபிஐ சிறப்பு நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து முறையிட்டனர். ஆனால் நீதிமன்றம் அவர்களின் மனுவை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, கர்நாடக அரசு இந்த சொத்துகளை தமிழ்நாடு அரசிடம் மாற்றும் பணியை தொடங்கியது. அதன்படி, பொருட்கள் மதிப்பீடு செய்யப்பட்டு நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 15) தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா நகை சொத்துக்களை ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியில் தெரிவித்தது போன்ற ‘நியூஸ் 7 தமிழ்’ (News 7 Tamil) செய்தியின் சமூக வலைத்தள கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
முக்கியமாக, அந்த பதிவை கோவை நிசார் (Kovai Nizar) எனும் பெயருடைய பயனர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் ‘நியூஸ் 7 தமிழ்’ செய்தி கார்டில், “தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகை சொத்துக்களை நியாயமாக ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Full View
மேலும், அந்த புகைப்படத்துடன் அவர் வெளியிட்டிருந்த பதிவில், “முண்*மே! அதை கர்நாடக கோர்ட்டில் போய் சொல்லு கலவர சங்கி! தமிழ்நாடு அரசிடம் கொடுங்கள் என்று ஆர்டர் போட்டது நீதி மன்றம்! ஏனென்றால் அது ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களிடம் ஏமாற்றிய பணம்! அது தமிழ்நாட்டுக்கு சொந்தம்!” என்று தெரிவித்துள்ளார்.
இவர் இதே பதிவை ‘இணையதள திமுக’ எனும் முகநூல் குழுவிலும் பகிர்ந்துள்ளார். அதை பயனர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.
வைரல் பதிவின் இணைப்பு இங்கே உள்ளது.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.

உண்மைத் சரிபார்ப்பு:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
முதலாவதாக, கோவை நிசார் முகநூல் பயனர் நியூஸ் 7 தமிழ் கார்டின் உண்மைத் தன்மையை ஆராய, அதை நுணுக்கமாக பரிசோதித்தோம். அப்போது, செய்தி நிறுவனம் பயன்படுத்தும் எழுத்துரு உடன், சமூக வலைத்தள பயனர்களால் பகிரப்படும் கார்டின் எழுத்துரு சரிபார்க்கப்பட்டது. அப்போது, அது போலியாக உருவாக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும், இது தொடர்பான செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்பதை அறிய, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் (Google reverse image) முறையைப் பயன்படுத்தி, பகிரப்படும் கார்டை பதிவேற்றினோம். அப்போது, இதனுடன் பொருந்திபோகும் ஒரு 'நியூஸ் 7 கார்டு' தேடல் முடிவில் முதன்மையாகக் காட்டப்பட்டது. அந்த இணைப்பைத் திறந்து பார்த்தப்போது, செய்தி நிறுவனம் போலி கார்டில் குறிப்பிடப்பட்டிருந்த அதே தேதியில் (பிப்ரவரி 15), அதே படத்தை வைத்து கார்டு வடிவில் ஒரு சமூக வலைத்தள செய்தியை வெளியிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், "முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சென்னையில் ஒரு AirShow-வை ஒழுக்கமாக நடத்த தெரியவில்லை, மணிப்பூர் பற்றிப் பேசுகிறார்; மற்ற மாநிலங்களில் நடக்கும் பிரச்னையைப் பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள பிரச்னையைப் பற்றி பேசுவது இல்லை - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி," என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் வாயிலாக, செய்தி நிறுவனம் வெளியிட்டப் பதிவில் இருந்த கார்டை எடுத்து, அதை போலியாக மீட்டுருவாக்கம் செய்திருப்பது புலப்பட்டது. எனினும், அண்ணாமலை, ‘ஜெயலலிதா நகைகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும்’ என சமீபத்தில் பேசியுள்ளாரா என்பதை அறிய கூகுள், பிங் போன்ற தளங்களில், 'BJP Annamalai latest speech' என்ற வார்த்தைகளைக் கொண்டு உலாவினோம். அப்போது, அண்ணாமலை கடைசியாக செய்தியாளர்களிடம் பேசிய வீடியோவும், ஜெயலலிதா நகைகள் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்ட செய்திகளும் தான் இருந்தது.
அண்ணாமலை, பிப்ரவரி 15 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, திமுக அரசை கடுமையாக விமரிசித்திருந்தார். ஆனால், அதன் முழு வீடியோவும் நேரலையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. யூடியூபில் செய்தி நிறுவனங்கள் பதிவிட்டிருந்த அந்த நேரலை வீடியோவை பார்த்தபோது, ஜெயலலிதா நகை சொத்துகள் குறித்து இதுபோன்ற எந்த தகவலையும் அவர் பகிரவில்லை என்பது உறுதியானது.
Full View
முடிவு:
மேற்கொண்ட தணிக்கையின் முடிவில், ஜெயலலிதா சொத்துக்களை தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி என்று பரவும் ‘நியூஸ் 7 தமிழ்’ செய்தி கார்டு போலியானது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
Claim :  ஜெயலலிதா சொத்துக்களை தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி.
Claimed By :  Social Media Users
Fact Check :  False
Tags:    

Similar News